அய்யா துணை

புனித அகிலத்திரட்டு அம்மானை

“உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் வைகுண்டவதாரத்தில் அருளிய வேதம்:
#அகிலத்திரட்டு அம்மானை”

(The Holy Scriptures of the Lord: Holy Akilathirattu”)
அகிலத்திரட்டு வேதம் கூறுகிறது..
ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்!
Lord Narayana Himself Incarnated as Vaikundar

மக்களுக்கு நேர்வழிகாட்டும்
அகிலத்திரட்டு வேதமானது, ஸ்ரீமன் நாராயணர் மகாலெட்சுமிக்கு உரைத்ததை உலகில் உள்ள மக்களறிய அரிகோபாலன் சீடர் மூலமாக இறைவனால் அருளப்பட்டது.
மேலும் இப்புனித அகிலத்திரட்டு அம்மானை வேதமானது, உலகைப் படைத்துக் காக்கும் நாராயணர் (மாயோன்), இக்கலியுகத்தில் சான்றோர்களாகிய நம் மீட்பிற்காகவும், இரட்சிப்பிற்காகவும் மனு அவதாரம் எடுத்து நாராயண பண்டாரமாக வேடம் தரித்து வைகுண்டராய் அவதரித்த காரணத்தையும், முந்தைய யுகங்களில் ஆண்டவர் நமக்காக எடுத்த அவதாரங்கள் பற்றியும், இக்கலியுக முடிவில் நடுத்தீர்ப்பு நடத்தி கலியன் பெற்ற வரங்களை பறித்து, கலியன்தனை நரகில் இடப்போவதையும், துவாரகாபதி யுதித்து மீண்டும் உலகாள வருவதையும் கதைப் போல விளக்குகிறது.
இப்புனித வேதநூலை அகிலத்திரட்டு அம்மானை என்றும், திருஏடு என்றும், வேதவியாசர் மொழிந்த ஆதியாகமான வேதங்களின் படி முறை நடத்த வந்த வேதம் என்றும், அகிலம் என்றும் அழைப்பர்.

இவ்வேதமானது அன்னை மகாலட்சுமி அய்யா நாராயணரிடம் “தேவரீ ரென்னைத் திருக்கல்யாணமுகித்துக்கோவரி குண்டக் குடியிருப்பிலேயிருத்திப்
போவது என்ன புதுமை எனக்கறிய
தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்ற
பின்னுமந்த லட்சுமியாள் பெருமாள் தனைத்தொழுது
என்றும் இருக்க இறவாதிருப்போனே
ஆதியால் சூட்சம் அளவெடுக்கக் கூடாத
நாதியாய் நின்ற நாராயணப் பொருளே
தேவாதிக் கெல்லாம் திருமுதலாய் நின்றோனே
மூவாதிக் கெல்லாம் முதன்மையாய் நின்றோனே
உமக்கு எதிரி உலகதி லுண்டோகாண்?
தமக்கு எதிரிவந்த தன்மை மிகவுரையும்
உகத்துக் குகம்பிறந்து உலகிடத்திலே யிருக்க
அகத்துவந்த ஞாயம் அருளுவீ ரெம்பெருமாள்!
எனக் கேட்க, நாராயணரும் மனம் மகிழ்ந்து அன்னை மகாலெட்சுமி தேவிக்கு பதிலாக அருளியதை நாராயணரின் அருளால் சகாதேவன் (எ) அரிகோபாலன் சீடர் ஏட்டில் எழுதியது. இவ் அகிலத்திரட்டு வேதமாக உருவாகப் பெற்றது.
மக்களுக்கு நேர்வழிகாட்ட இறைவனால் அருளப்பட்டது என்பதை கீழ்கண்ட அகிலத்திரட்டு வாசகங்கள் விவரிக்கின்றன.

“வியாகரரும் முன்னாள் மொழிந்த முறைநூல் படியாலே நாரணரும் வந்து நடத்தும் வளமை தன்னைக்
காரணமாய் யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யாரமாக உள்வினை நோய் தீருமென்று
அய்யாவும் இக்கதையை அருளுகிறா ரன்பாேரே!
நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர்
நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர்
ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து
அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம்!
சான்றாேர்களே! யுகம் யுகம் தோறும் திரு அவதாரம் எடுத்த ஸ்ரீமன் நாராயணரே இக்கலியுகத்தில் 10 – வது அவதாரமாக ஸ்ரீமன் வைகுண்டராக அவதரித்து நம்மைக் காத்து இரட்சித்தார் என்பதையும், இக்கலியுகம் முடியும் தருவாயில் இக்கலியுகத்தை அழித்து புதுயுகமாகிய தர்மயுகத்தை தோற்றுவித்து தர்மசீமையிலே துவாரகா பதியுதித்து அரசாள வரகிறார்..! என்ற நற்செய்தியை அனைவரும் அறியும்படி கூறுவது தான் இக்கலியுக தர்மமாகும். ஆகையால் நாம் நாராயணர் அருளினால் நல் வாழ்வைப் பெற நற்செய்தியை அனைவருக்கும் வழங்குவோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்!

அகிலத்திரட்டு அம்மானை பகுதிகள்